பெரம்பலூர்
சாலையில் விழுந்த 'ஆசிட்' பயங்கர சத்தத்துடன் வெடித்தது
|பெரம்பலூரில் சாலையில் விழுந்த ‘ஆசிட்’ பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் மயங்கி விழுந்தார்
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று காலை 11.45 மணியளவில் திடீரென்று டமார் என்று வெடி சத்தம் கேட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள், அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். இந்த சத்தத்தை கேட்டு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். பின்னர் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு எழுப்பப்பட்டார்.
டமார் என்று வெடித்தது ஏதோ வாகனத்தின் சக்கரமாக இருக்கலாம் என்று எண்ணினர். ஆனால் வெடித்தது சாலையில் உடைந்து விழுந்த 'ஆசிட்' (திராவகம்) என்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
'ஆசிட்' தண்ணீர் போல் சாலையில் ஓடியது. மேலும் கொளுத்திய வெயிலுக்கு 'ஆசிட்' பொறிந்து கொண்டிருந்தது. இதனால் மீண்டும் வெடிக்கலாம் என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் கொட்டி கிடந்த 'ஆசிட்' மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சாலையை தூய்மைபடுத்தினர். 'ஆசிட்' வெடிக்கும் போது, அதனருகே யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து அந்தப்பகுதியில் நின்றவர்கள் கூறுகையில், இந்த வழியாக சென்ற ஒரு இருசக்கர வாகனத்தில் இருந்து 'ஆசிட்' தவறி கீழே விழுந்து உடைந்தது. அந்த இருசக்கர வாகன ஓட்டியும் 'ஆசிட்' கீழே விழுந்தது கூட தெரியாமல் சென்று விட்டார். சில நிமிடத்திலேயே அந்த 'ஆசிட்' பயங்கர சத்தத்துடன் வெடித்து புகையானது மட்டுமின்றி 'ஆசிட்' சாலையில் தண்ணீர் போல் ஓடியது. அந்த 'ஆசிட்' நகை பட்டறையில் பயன்படுத்தக்கூடிய ஆசிட்டாக இருக்கலாம், என்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் 'ஆசிட்' கொண்டு சென்றது யார்? அவர் எதற்காக 'ஆசிட்' கொண்டு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.