< Back
மாநில செய்திகள்
ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தினத்தந்தி
|
23 July 2022 9:18 PM IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆடிப்பூர பிரம்மோற்சவம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் கார்த்திக்கை தீப விழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் போன்றவை முக்கியமானவை.

இந்த நிலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி அதிகாலையில் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தின் முன்பு பராசக்தி அம்மனை பக்தர்கள் மத்தியில் எழுந்தருள செய்தனர்.

கொடியேற்றம்

தொடர்ந்து பராசக்தி அம்மன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டு காலை 6.30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. அதை தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவமும் மாட வீதியில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

அதன்படி இன்று விநாயகர், பராசக்தி அம்மன் உற்சவம் வீதிஉலா நடைபெற்றது.

இந்த விழா வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.

1-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்