< Back
மாநில செய்திகள்
பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 92 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது
தர்மபுரி
மாநில செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 92 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது

தினத்தந்தி
|
30 May 2022 11:00 PM IST

கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக தர்மபுரி அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 92 மூட்டை ரேஷன் அரிசி போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி:

கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக தர்மபுரி அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 92 மூட்டை ரேஷன் அரிசி போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி பதுக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவுப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் செந்தில் முருகன், முரளி, ராமச்சந்திரன், செந்தில்குமார் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தர்மபுரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் இருந்து அரூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மான்காரன் கொட்டாய் பகுதியில் சிலர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள சிவன் கோவில் அருகில் தலா 50 கிலோ எடை கொண்ட 92 மூட்டை ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது, கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக அங்கு ரேஷன் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டு இருப்பது உறுதியானது. அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 32), அன்பு (35) ஆகியோர் இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்வராஜ், அன்பு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அங்கு சிக்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு தர்மபுரி நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்