< Back
மாநில செய்திகள்
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

ஆசிய கோப்பையை சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் முகமது தயப் இக்ராம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய போது எடுத்த படம்.

மாநில செய்திகள்

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
3 Aug 2023 12:26 AM GMT

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, 3 முறை சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் (செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8) இன்னும் 50 நாட்களில் அரங்கேற இருக்கும் நிலையில் நடைபெறும் இந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டில் முதலிடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு ஏதுவாக தங்களது திறமையையும், யுக்தியையும் மேம்படுத்த இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி எல்லா அணிகளுக்கும் நல்லதொரு வாய்ப்பாகும்.

இந்தியா-சீனா மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காக எல்லா அணிகளும் சென்னை வந்து விட்டதுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, ஜப்பானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதனையடுத்து மாலை 6.15 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 25-வது இடத்தில் இருக்கும் சீனாவை எதிர்கொள்கிறது.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் ஸ்பெயினில் நடந்த 4 நாடுகள் ஆக்கி தொடரில் 'நம்பர் ஒன்' அணியான நெதர்லாந்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது. அதே உத்வேகத்துடன் இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்குகிறது. கடந்த முறை (2021) 3-வது இடமே பெற்ற இந்திய அணி சொந்த மண்ணில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி வாகை சூட எல்லா வகையிலும் வரிந்து கட்டும். உள்ளூர் சூழ்நிலை இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். எனவே இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சவாலை சமாளிப்பது சீனாவுக்கு கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 7 ஆட்டங்களில் 6-ல் இந்தியா வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.



கேப்டன் கருத்து

போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில், 'இதுபோன்ற போட்டிகளில் எந்த அணியையும் எளிதாக எடுத்து கொள்ள முடியாது. ஆசிய அணிகளுடன் மோதும் போது நாங்கள் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை இந்த போட்டியின் மூலம் பார்ப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.

ஆசிய விளையாட்டுக்கு முன்னதாக நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம். கிரிக்கெட் மற்றும் ஆக்கி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே எப்போதும் பரவசமும், உற்சாகமும் பீறிடும். இயல்பாகவே பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகையில் உணர்ச்சி பெருக்கு அதிகமாக இருக்கும். ஆனால் எங்களை பொறுத்தமட்டில் இது மற்றொரு ஆட்டம் தான். ஆட்டத்தை வெல்ல வேண்டும் என்ற கவனத்துடன் மட்டுமே களம் இறங்குவோம்' என்றார்.

இந்திய அணி வீரர்கள்

இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வீரர்கள் வருமாறு:-

கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், பின்களம்: ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜூக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ், சஞ்சய், நடுகளம்: ஹர்திக் சிங் (துணை கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட ஷர்மா, ஷாம்ஷெர் சிங், முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங், எஸ்.கார்த்தி.

சென்னையில் 16 ஆண்டுக்கு பிறகு நடக்கும் சர்வதேச ஆக்கி திருவிழா இது என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கடைசியாக 2007-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி சென்னையில் நடந்தது. இதில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி கோப்பையை கையில் ஏந்தியது. இதனால் ராசியான சென்னையில் அதனை போன்று மீண்டும் ஒரு மகிழ்ச்சியை இந்திய அணியினர் அளிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.



நேரடி ஒளிபரப்பு

இந்த போட்டிக்காக சென்னை ஆக்கி ஸ்டேடியம் ரூ.16 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் நவீன வசதிகளால் ஸ்டேடியம் களைகட்டி இருக்கிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒருநாளில் நடைபெறும் ஆட்டங்கள் அனைத்தையும் பார்க்க ரூ.300, ரூ.400 விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஓளிபரப்பு செய்கிறது. பேன் கோடு செயலியிலும் இதனை பார்க்கலாம்.

இதுவரை சாம்பியன்கள்...

2011-இந்தியா

2012-பாகிஸ்தான்

2013-பாகிஸ்தான்

2016-இந்தியா

2018-இந்தியா-பாகிஸ்தான்

2021-தென்கொரியா

2023- ???





மேலும் செய்திகள்