< Back
மாநில செய்திகள்
4 வயது மகனை மீட்டு தரக்கோரி கணவர் வீட்டு முன் தாயுடன் இளம்பெண் தர்ணா
சென்னை
மாநில செய்திகள்

4 வயது மகனை மீட்டு தரக்கோரி கணவர் வீட்டு முன் தாயுடன் இளம்பெண் தர்ணா

தினத்தந்தி
|
22 April 2023 1:38 PM IST

4 வயது மகனை மீட்டு தரக்கோரி கணவர் வீட்டு முன் தாயுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (வயது 39). வக்கீல். இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த மதுமாலா (29) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் கோஷல் என்ற மகன் உள்ளான்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனை அழைத்து கொண்டு மதுமாலா மைசூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

செந்தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுடன் மைசூருக்கு சென்று மாமியார் வீட்டில் இருந்த தனது மகனை தூக்கி வந்துவிட்டதாக தெரிகிறது. இது குறித்து மைசூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதுடன், தனது மகனை மீட்டு தரக்கோரி மைசூர் கோர்ட்டில் மதுமாலா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு, மகனை தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரையிலும் மகனை மதுமாலாவிடம் ஒப்படைக்காததுடன், பார்க்கவும் அனுமதிக்கவில்லை. கெருகம்பாக்கம் வந்தாலும் குழந்தையை பார்க்க மாமியார் அனுமதிப்பது இல்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி மதுமாலா தன்னுடைய தாயாருடன் கணவர் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை வந்தார். அப்போது செந்தமிழ்ச்செல்வன் வீட்டில் இல்லை. குழந்தையுடன் வீட்டில் இருந்த மதுமாலாவின் மாமியார், மதுமாலாைவ பார்த்ததுடன், அவரை உள்ளே அனுமதிக்காமல் வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டார்.

இதனால் மதுமாலா தனது கணவர் வீட்டின் முன்பு தனது தாயுடன் தரையில் அமர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், கதவை திறக்கும்படி கூறினர். ஆனால் அவருடைய மாமியார் கதவை திறக்காமல் வீட்டுக்குள் இருந்தபடியே பதில் கூறினார்.

இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அதற்கு அவருடைய மாமியார், போலீசார் வீட்டுக்குள் வந்தால் குழந்தையை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதனால் போலீசாரால் கதவை உடைத்து வீட்டுக்குள் செல்ல முடியவில்லை.

ஆனால் தனது மகனை அழைத்து செல்லாமல் போக மாட்டேன் என இளம்பெண் தனது தாயுடன் தொடர்ந்து கணவர் வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையில் நேற்று மாலை வீட்டில் இருந்த மதுமாலாவின் மாமியார், தனக்கு நெஞ்சு வலிப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள், மதுமாலாவின் மாமியாரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்த பிறகு அவர் கதவை திறந்ததால் அந்த நேரத்தில் போலீசாருடன் மதுமாலாவும் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு அவரது குழந்தை இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

நேற்று முன்தினம் மாலை முதல் மதுமாலா வீட்டின் முன்புறம் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். யாரும் அந்த நேரத்தில் வீட்டின் உள்ளேயோ, வெளியேயோ செல்லவில்லை. எனவே மாடி வழியாக அக்கம் பக்கத்து வீடுகள் வழியாக குழந்தையை யாருடனாவது அனுப்பி வைத்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கதவை பூட்ட விடாமல் மதுமாலா தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மாங்காடு போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்