தஞ்சாவூர்
'4-ஜி' சேவை மார்ச் மாதத்துக்குள் கிடைக்கும்
|‘4-ஜி’ சேவை மார்ச் மாதத்துக்குள் கிடைக்கும்
தஞ்சை, காரைக்காலில் '4-ஜி' சேவை மார்ச் மாதத்துக்குள் கிடைக்கும் என பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பால.சந்திரசேனா தெரிவித்தார்.
பேட்டி
தஞ்சை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பால.சந்திரசேனா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 23-வது நிறுவன நாளையொட்டி, பாரத் பைபர்(எப்.டி.டி.எச்.) ரூ.599 மற்றும் அதற்கும் அதிகமாக உள்ள திட்டங்களில் இணைப்பு பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச வைபை மோடம் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேன்ட் இணைப்பை எப்.டி.டி.எச். சேவைக்கு மாற்றுபவர்களுக்கு ரூ.200 வீதம் கட்டண தொகையில் சலுகை பெறலாம்.
மாதம் ரூ.499 கட்டணத்தில் எப்.டி.டி.எச். இணைப்புகள் இன்று(அதாவது நேற்று) முதல் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வாட்ஸ்-அப் மூலமாக தஞ்சை பகுதிகளில் உள்ளவர்கள் 75980-40780 என்ற எண்ணிற்கும், கும்பகோணம் பகுதியில் உள்ளவர்கள் 75980-44146 என்ற எண்ணிற்கும் தகவலை அனுப்பி புதிய எப்.டி.டி.எச். இணைப்புகளை எளிதில் பெறலாம்.
'4-ஜி' சேவை
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்கெனவே திருச்சி, மதுரை, கோவை, சேலம், காஞ்சீபுரம், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் '4-ஜி' சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, தஞ்சை மாநகரில் 44 இடங்களிலும், காரைக்கால் நகரில் 24 இடங்களிலும் '4-ஜி' சேவைக்கான ஆயத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தஞ்சை மாநகரிலும், காரைக்கால் நகரிலும் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்துக்குள் '4-ஜி' சேவை கிடைக்க சாத்தியம் உள்ளது.
மேலும் உளூர் கிழக்கு, வீரியங்கோட்டை, அக்கரைப்பேட்டை, திருமலைராஜபுரம் ஆகிய கிராமங்களில் மத்திய அரசின் யு.எஸ்.ஓ.எப். திட்டத்தின் கீழ் '4-ஜி' சேவை வழங்கப்பட உள்ளது. பிரிபெய்டு '4-ஜி' சிம் கார்டுகள் ரூ.108-க்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது துணைப்பொது மேலாளர்(நிர்வாகம்) ராஜ்குமார், உதவிப்பொது மேலாளர்கள் பர்னாலா டிவைன் மேரி ஜோசப்(நிர்வாகம்), கோவி. செந்தில்செல்வி(திட்டம்), ராஜேஷ் (தஞ்சை), அலுவலர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.