சுமார் 9 மணி நேரமாக நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நிறைவு
|மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களின் பெற்றோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் விஜய், அரசியல் ரீதியாகவும் பேசினார்.
சென்னை,
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.
இந்நிலையில், இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி முதற்கட்டமாக, கடந்த 28ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது . கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், 2ம் கட்டமாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார்.
தமிழக வெற்றிக்கழக விருது வழங்கும் விழா மேடையில் விருது பெற்ற மாணவி விஜய்க்காக மேடையிலேயே கவிதை கூறியது அனைவரையும் கவர்ந்தது. விருது விழா மேடையில் விஜய்யிடம் விருது பெற்ற பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா, "உங்கள் நடிப்புத் திறமையைப் பார்க்க முடியாவிட்டாலும்...உங்கள் குரலைக் கேட்க வந்துள்ளேன்" என்று கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக இன்றைய விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களின் பெற்றோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் விஜய், அரசியல் ரீதியாகவும் பேசினார்.
அதில், "நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை அடிப்படையில் கல்வி கற்றலுக்கே எதிரான விஷயமாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல. மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்.சி.ஆர்.டி. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் சமமாக எழுத முடியும். அதுவும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்பதை யோசித்துப் பாருங்கள்" என்று மாணவர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் சுமார் 9 மணி நேரமாக நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நிறைவடைந்துள்ளது.