< Back
மாநில செய்திகள்
தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா
திருச்சி
மாநில செய்திகள்

தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா

தினத்தந்தி
|
26 April 2023 2:43 AM IST

தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது.

மலைக்கோட்டை:

தேர்த்திருவிழா

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் உச்சிபிள்ளையாருக்கு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை துவஜாரோகணம் (கொடியேற்றம்) நிகழ்ச்சி நடந்தது. இதில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் கேடயத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி கற்பகவிருட்சம் வாகனம், அம்பாள் கிளி வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை(வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி பூத வாகனம், அம்பாள் கமல வாகனத்திலும், 28-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி கைலாசபர்வதம் வாகனம், அம்பாள் அன்னம் வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.

தேரோட்டம்

29-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக (தாயுமானவராக) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. இரவு அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத்தினாவதிக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சுவாமி யானை வாகனம், அம்பாள் முத்துப்பல்லக்கில் புறப்பாடு நடைபெறுகிறது.

1-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி நந்திகேசர் வாகனம், அம்பாள் யாழி வாகனத்தில் வீதி உலா, 2-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்க குதிரை வாகனம், அம்பாள் பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி தேர் நிலையில் வேடுபறி ஐதீக நிகழ்ச்சியும், முன்னதாக 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தேர் மகா அபிஷேகம், தீபாராதனையும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 3-ந் தேதி காலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க் கால் கண்டு அருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்