< Back
மாநில செய்திகள்
சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளுக்கு நன்றி - திருமாவளவன்
மாநில செய்திகள்

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளுக்கு நன்றி - திருமாவளவன்

தினத்தந்தி
|
12 Oct 2022 7:22 PM IST

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளுக்கு திருமாவளவன் நன்றி கூறியுள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள் இணைந்து முன்னெடுத்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் சனாதன சமூகப் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை என்பதை அழுத்தமாக உணர்த்தியுள்ளது.

இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவளித்த பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கும், கலந்து கொண்ட பொது மக்களுக்கும் விசிக சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் 33 அரசியல் கட்சிகள், 44 இதர இயக்கங்கள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பங்கேற்றுள்ளன.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே இவ்வளவு இயக்கங்கள் ஆர்எஸ்எஸூக்கு எதிராக ஒன்று குவிந்தன என்பது புதிய வரலாறு. இதே அரசியல் விழிப்புணர்வோடும், சமூகப் பொறுப்புணர்வோடும் தொடர்ந்து இணைந்து பயணிப்போம்! சனாதன சங்பரிவார் சதிக் கும்பலிடம் இருந்து, சமூகப் பிரிவினைவாதிகளிடம் இருந்து நம் தமிழ் மண்ணைப் பாதுகாப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்