< Back
மாநில செய்திகள்
சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
மாநில செய்திகள்

'சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி' - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

தினத்தந்தி
|
17 Feb 2024 9:22 PM IST

சிறுபான்மை மக்களின் எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவிப்பதாக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டு சிறுபான்மை முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்பு இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள்.

இந்த அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பிலும், சிறுபான்மை முஸ்லிம்களின் கல்வி நிறுவனங்கள் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதன் முதலாக சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அரசு உயர் அலுவலர்களுடன் சேர்ந்து கலந்தாலோசனை நடத்தியது ஒரு சிறப்புமிக்க முன்மாதிரி நிகழ்வாகும். இன்றைய கூட்டத்தில் நெடுங்கால முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளுக்கு மாண்புமிகு முதல்-அமைச்சர் தீர்வு அளித்து வரலாறு படைத்துள்ளார்.

சிறுபான்மையின முஸ்லிம்களின் நீண்ட கோரிக்கையான சிறைவாசிகள் முன்விடுதலை, சிறுபான்மை அந்தஸ்து சான்று, சிறுபான்மை மாணவ, மாணவியர்களுக்கும் கல்வி உதவித் தொகை, பள்ளிவாசல்களுக்கு தேவையான நிர்வாக அனுமதி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம், வக்ப் வாரிய பணியாளர் நியமனம், மதுரையில் வக்ப் கூடுதலாக தீர்ப்பாயம், சிறுபான்மையின முஸ்லிம் மாணவகளுக்கு 5 இலட்சம் வரை கல்விக் கடன், உள்ளிட்ட கோரிக்கைகளை தொடந்து மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்து வந்தது. இந்த கோரிக்கைகளை 11.01.2023 மற்றும் 24.03.2023 சட்டமன்றத்திலும் நான் வலியுறுத்தி வந்த நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சரிடம் 23.12.2023 நாளிட்ட கடிதங்கள் வாயிலாக வைத்த கோரிக்கையினாலும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறுபான்மை மக்களின் எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றித் தர மாண்புமிகு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்