கவர்னர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நன்றி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்..!
|கவர்னர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் கவர்னருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போல, எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் கவர்னர்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தேவை என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பாக கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னருக்கு எதிரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு பாராட்டுதலை தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
கவர்னரின் செயல்பாட்டுக்கு கூட்டு நடவடிக்கை அவசியம் என்றும் அரசின் செயல்பாட்டை முடக்கும் வகையில் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு கவர்னர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். கவர்னருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரீசலிப்போம் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார். அதில்,
கவர்னர் விவகாரம் குறித்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி. மாநில சுயாட்சியை பறிக்கும் செயலுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழ்நாடும், கேரளாவும் அரணாக இருந்துள்ளன. கவர்னரின் வரம்பு மீறலுக்கு எதிரான போரிலும் நாம் வெல்வோம். தீ பரவட்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.