விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி - ஓ.பன்னீர்செல்வம்
|பத்ம விருதுகள் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இது இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன: அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன்.
கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி என்று தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எனது நன்றி.
இதேபோன்று, பத்ம விபூஷண் விருதினைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஜயந்திமாலா பாலி, பத்மா சுப்ரமணியம், பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ள வள்ளி ஒயில் கும்மி ஆட்ட கலைஞர் பத்திரப்பன், குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் ஜோடி குரூஸ், மருத்துவர் நாச்சியார், நாதஸ்வர இசைக் கலைஞர் சேஷம்பட்டி டி. சிவலிங்கம் ஆகியோருக்கு எனது நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.