எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி - விஜயகாந்த்
|தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
சென்னை,
உடல் நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது எனக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய திரை உலகை சேர்ந்த அனைவருக்கும், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், தேமுதிக மாவட்ட கழக செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் அனைவருக்கும், எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.