கவர்னர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம் பதிவு - சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. தீர்மானம் தாக்கல்
|கவர்னர் உரைக்கு நன்றி கலந்த வருத்தத்தை பதிவு செய்து சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் கூடும்போதும், கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். அந்த வகையில், கடந்த 9-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் உரை நிகழ்த்தினார். ஆனால், உரையின் சில பக்கங்களை அவர் படிக்காமல் விட்டுவிட்டதாக சலசலப்பு எழுந்தது. அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.
இந்த நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை தி.மு.க. உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு, கவர்னரால் இசைவளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் கவர்னர் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது.
பேரவையின் மாண்பினைப் போற்றிடும் வகையில், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி பேரவையில் பதிவு செய்யப்பட்ட கவர்னரின் பேருரைக்கு இப்பேரவை உறுப்பினர்கள் நன்றியுடையவர்களாவர். கவர்னர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசினார்கள்.