தஞ்சை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
|கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தே.மு.தி.க. தஞ்சை மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தே.மு.தி.க. தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராமநாதன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த இராமநாதன், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், இவர் மாவட்ட கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (23.03.2024) முதல் நீக்கப்படுகிறார். இவருடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி.செங்குட்டுவன், இன்று (23.03.2024) முதல் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.