சென்னை
புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலுக்கு தங்கத்தேர் - அமைச்சர் சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தார்
|புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலுக்கு தங்கத்தேர் மற்றும் மரத்தேர் செய்யும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை புரசைவாக்கம், கங்காதீசுவரர் கோவிலில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் (அதில் ரூ.31.5 லட்சம் மதிப்பில் தங்கத்தேருக்கான சிறிய மரத்தேர்) மற்றும் ரூ.81 லட்சம் மதிப்பில் வீதியில் உலா வரும் பெரிய மரத்தேர் ஆக ரூ.6.81 கோடி மதிப்பில் புதிய தேர்கள் செய்யும் பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
கோவில்களில் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்காக தங்கத்தேர், வெள்ளித்தேர் மற்றும் மரத்தேர்களை செய்யும் பணிகளில் இந்து சமய அறநிலையத்துறை துரிதமாக ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலுக்கு ரூ.6 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் செய்ய உபயதார நிதியின் மூலம் ரூ.31.5 லட்சம் மதிப்பில் தங்கத்தேருக்கான சிறிய மரத்தேர் செய்யும் பணி மற்றும் ரூ.81 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.10 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதில் தங்கத்தேர் மற்றும் மரத்தேர் பணிகளை தவிர்த்து சுமார் ரூ.4 கோடி மதிப்பில் ராஜகோபுர விமானங்கள் மற்றும் சன்னதிகளின் மராமத்து உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதத்திற்குள் திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் அ.சங்கர், இணை கமிஷனர் ஜ.முல்லை, உதவி கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) சி.நித்யா, சென்னை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.ரவிச்சந்திரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் பெ.வெற்றிக்குமார், மற்றும் அறங்காவலர்கள், செயல் அலுவலர் சா.ராமராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.