தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு..!!
|பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 3 மணி நேர நிலவரப்படி வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நெல்லை,
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய லேசான மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. பகல் 12 மணி அளவில் இருந்து கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மிக கன மழை பெய்தது. மணிமுத்தாறு அணை மற்றும் அருவியின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் தேயிலை தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து மற்றும் காக்காச்சி பகுதிகளில் தலா 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவி வழியாக அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மணிமுத்தாறு அருவி இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மூழ்கியவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.
இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 117 கன அடி நீர்வரத்து உள்ளதாகவும், 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றறப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம், சேர்வலாறு
இதேபோல் பாபநாசம் அணை மற்றும் இதனுடன் இணைந்த சேர்வலாறு அணைகளுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து உள்ளது. நேற்று காலையில் 125.20 அடியாக இருந்த நீர்மட்டம் (உச்சநீர்மட்டம் 143 அடி) மாலையில் 135 அடியாக உயர்ந்தது.
இதையொட்டி அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 136 அடியாக (உச்சநீர்மட்டம் 156 அடி) இருந்தது. மாலையில் இந்த அணை நீர்மட்டம் 150 அடியை தொட்டது.
இந்நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 3 மணி நேர நிலவரப்படி வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காட்டாறு வழியாக வரக்கூடிய வெள்ளநீர் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது. மேலும் கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பி உபரி நீரும் வெளியேறுவதால் அந்த தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இந்த சூழலில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு கூடுதலாக சிறப்பு பயிற்சி பெற்ற 2 பெண் வீராங்கனைகள் உள்பட 8 தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அதி நவீன தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் விரைந்துள்ளனர்.
இதனிடையே தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும், அதிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழை வரையிலும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.