சென்னை
தாம்பரம் - நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு - 5 மாதங்களில் ரூ.2.14 கோடி வருமானம் வசூல்
|தாம்பரம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இயக்கப்பட்ட 5 மாதங்களில் தென்னக ரெயில்வேக்கு ரூ.2.14 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
நெல்லை-தாம்பரம் இடையே கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 5 மாதங்கள் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லை - தாம்பரம் இடையேயும், திங்கட்கிழமை தோறும் தாம்பரம் - நெல்லை இடையேயும் இந்த ரெயில் இயங்கியது.
இந்த ரெயில்கள் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டன.
இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கு பயணிகளிடையே சிறப்பான வரவேற்பு இருந்தது. ஆனால் ஜனவரி மாதத்துடன் இந்த வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் 5 மாதங்கள் இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் கிடைத்த வருமானம் மற்றும் அதில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு தெற்கு ரெயில்வே அளித்துள்ள பதிலில், "5 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரெயில்களிலும் சேர்த்து மொத்தம் 33 ஆயிரத்து 517 பேர் பயணம் செய்து உள்ளனர். இவர்களின் மூலம் சுமார் ரூ.2.14 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக" கூறப்பட்டு இருந்தது.
நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் ரெயில் பெட்டிகளை கொண்டு இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இவற்றின் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால் இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களை மீண்டும் நிரந்தரமாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாண்டியராஜா கூறும்போது, "பயணிகளிடையே இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரெயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. எனவே நிறுத்தப்பட்ட இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களை மீண்டும் நிரந்தரமாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.