< Back
மாநில செய்திகள்
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மாநில செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தினத்தந்தி
|
16 Jan 2024 11:37 PM IST

கொடி பட்டம் பல்லக்கில் உட்பிரகாரத்தில் வீதி உலா எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

நெல்லை,

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து காலை 6.30 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

25-ந்தேதி (வியாழக்கிழமை) தைப்பூச தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்று நண்பகலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர் மற்றும் அஸ்திர தேவர் -அஸ்திர தேவி ஆகியோர் நெல்லையப்பர் கோவிலிலில் இருந்து கைலாசபுரம் தைப்பூச மண்டபத்துக்கு வந்து எழுந்தருளுகிறார்கள். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

26-ந்தேதி சவுந்தர சபாவில், பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்சி அருளும் நிகழ்ச்சியும், 27-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்