< Back
மாநில செய்திகள்
தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
மாநில செய்திகள்

தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
25 Jan 2024 6:54 AM IST

தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

காலை 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திரளான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வந்தனர். தைப்பூசத்தையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காணும் இடமெல்லாம் பக்தர்களாகவே காட்சியளிப்பதால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்