< Back
மாநில செய்திகள்
தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்...!
மாநில செய்திகள்

தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்...!

தினத்தந்தி
|
5 Feb 2023 5:02 PM IST

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

இந்நிலையில் மத்திய தகவல் தொடர்பு இணை மந்திரி எல். முருகன் தனது மகனுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல். முருகன் தெரிவித்ததாவது,

உலகத் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படுவது தைப்பூச திருவிழா. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலுக்கு வேல் யாத்திரை நடத்தினோம். வேல் யாத்திரையின் முக்கிய கோரிக்கையாக தமிழக அரசுக்கு தைப்பூச திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம்.

அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தைப்பூச விழாவை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது வேல் யாத்திரையின் வெற்றியாக கருதப்பட்டது என்றும், முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் வருகையொட்டி கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செய்திகள்