திருவள்ளூர்
சிறுவாபுரி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
|தைப்பூச திருவிழாவையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிறுவாபுரி முருகன் கோவில்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் உள்ள சிறுவாபுரியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய் தீபம் ஏற்றினால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த ஆகஸ்டு மாதம் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
நேற்று தைப்பூசத்தையொட்டி, கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னேரி
அதேபோல், பொன்னேரி அடுத்த சின்னகாவனம் வள்ளலார் தாயார் சின்னம்மையார் வாழ்ந்த பகுதியில் வள்ளலாரின் 200-வது தைப்பூச விழா நடைபெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் ஞான தீபத்தை தரிசனம் செய்தனர். குமரஞ்சேரி முத்துக்குமாரசுவாமி கோவில், பொன்னேரி அகத்தீஸ்வரர், ஞாயிறு கிராமத்தில் புஷ்பதீஸ்வரர், செம்புலிவரம் செங்காளம்மன் கோவில், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவில், பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் திருக்கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
மீஞ்சூர்
மீஞ்சூர் அடுத்த வேலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் நேற்று தைப்பூச விழாவில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். நாலூர் கிராமத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சுவாமிகளின் 200-வது தைப்பூச விழா நடைபெற்றது.
மேலும், மீஞ்சூர் ஆறுமுகசாமி கோவில், நாலூர் நாகவல்லிஸ்வரர் கோவில், நெய்தவாயல் அக்னீஸ்வரர் கோவில், மேலூர் திருவுடையம்மன் கோவில், திருவெள்ளைவாயல் திருவெண்ணீஸ்வரர் கோவில், பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோவில், வாயலூர் பவானி அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.