காஞ்சிபுரம்
குன்றத்தூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
|தைப்பூச திருவிழாவையொட்டி குன்றத்தூர் முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசம்
தைப்பூசம் முருக பெருமானுக்கு உகந்தநாள் என்பதால் முருகன் கோவில்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. குறிப்பாக குன்றின் மீது அமைந்துள்ள குன்றத்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். காலை முதலே கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசனத்தை போல ரூ.50 கொடுத்து கட்டண தரிசனத்திலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் கூட்டம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர பாதுகாப்பு
மேலும் குன்றத்தூர் முருகன் கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மலையின் மீது வாகனங்கள் அனுமதித்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்திற்காக மலைக்கு செல்லும் பாதை மூடப்பட்டது.
பக்தர்கள் கோவிலின் படிக்கட்டு வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும் குன்றத்தூர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.