மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு தாய்லாந்து டாக்டர்கள் சிகிச்சை
|கண்புரை நோயால் அவதிப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி யானைக்கு சிகிச்சை அளிக்க தாய்லாந்து டாக்டர்கள் வந்துள்ளனர்.
கண்புரை நோயால் அவதிப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி யானைக்கு சிகிச்சை அளிக்க தாய்லாந்து டாக்டர்கள் வந்துள்ளனர்.
யானைக்கு கண் பாதிப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பார்வதி என்ற யானை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யானையின் இடது கண்ணில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் மற்றொரு கண்ணிலும் கண்புரை நோய் பரவ தொடங்கியது. இதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் முன்னேற்றம் இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால் இதில் சிறப்பு வாய்ந்த தாய்லாந்து டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக தாய்லாந்து மருத்துவர்கள் 2 முறை காணொலி காட்சி வழியாக பார்வதி யானையை பார்வையிட்டு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென பரிந்துரை செய்து வந்தனர்.
தாய்லாந்து டாக்டர்கள் வருகை
இந்த நிலையில் யானைக்கு சிகிச்சை அளிக்க தாய்லாந்து கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசிரியர் நிக்ரோன் தோங்திப் தலைமையிலான 7 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு நேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தது. அவர்கள் யானை பார்வதியை நேரில் பார்வையிட்டு அதற்கு கண்புரை பாதிப்பு எந்த அளவு உள்ளது. எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென ஆய்வு செய்தனர். மேலும் சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாய்லாந்து மருத்துவக்குழுவிடம் யானை பார்வதிக்கு கண்புரை பாதிப்புகளை கட்டுப்படுத்த தேவையான சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாய்லாந்து தூதர் மூலம்..
நான் இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும்போதே யானைக்கு உள்ள பாதிப்பு குறித்து அறிந்தேன். அதைத்தொடர்ந்து அதற்காக டாக்டரிடம் தெரிவித்து சிகிச்சையும் அளிக்க உதவி செய்தேன். இந்த நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சேகர்பாபு பார்வதி யானையை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மதுரை கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சையில் முன்னேற்றமும் இல்லை, இடது கண்ணில் பாதிப்பு வலது பக்கம் பரவ தொடங்கியது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நான் தாய்லாந்து தூதரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். ஏனென்றால் தாய்லாந்தில் தான் யானைக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து அவர்கள் 2 முறை காணொலி காட்சி மூலமும் யானையை பார்த்து சிகிச்சை குறித்து தெரிவித்தனர்.
தற்போது தாய்லாந்து மருத்துவர்கள் 7 பேர் கொண்ட குழு நேரில் வந்து யானையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த பரிசோதனையானது நாளையும் நடைபெறுகிறது. யானைக்கு அளிக்கப்படும் இந்த சிகிச்சையால் கண் பார்வை முழுமையாக வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அது அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் அனிஷ்சேகர், கோவில் துணை கமிஷனர் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.