நாமக்கல்
50 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகம் வினியோகம்!
|நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 50 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நேற்று விலையில்லா பாடபுத்தகம் வழங்கப்பட்டதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
கலெக்டர் வரவேற்றார்
தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த 12-ந் தேதி கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன.
காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை கலெக்டர் உமா மலர் கொடுத்து வரவேற்று பாடப்புத்தகங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 33,710 மாணவர்கள், 34,677 மாணவிகள் என மொத்தம் 68,387 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் 921 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 25,441 மாணவர்கள், 24,651 மாணவிகள் என மொத்தம் 50,092 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகம் வழங்கப்பட்டு உள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகள்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கல்வி பயில சிறப்பான சூழலை ஏற்படுத்தி வருகின்றார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, வண்ண பென்சில், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்களையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இது மட்டுமின்றி அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஸ்மார்ட் வகுப்பறையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை மாணவ செல்வங்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து கல்வி பயில வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) பாலசுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.