திருப்பூர்
3 ஆயிரத்து 239 பேர் குரூப்-1 தேர்வை எழுதினார்கள்
|டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 239 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 239 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வு நேற்று நடைபெற்றது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி இயக்குனர், கூட்டுறவுத்துறை பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி உள்பட 92 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு எழுத 5 ஆயிரத்து 856 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டம் முழுவதும் 13 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என மொத்தம் 20 மையங்களில் நேற்று காலை தேர்வு நடைபெற்றது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.
45 சதவீதம் பேர் வரவில்லை
நேற்று நடந்த தேர்வில் 3 ஆயிரத்து 239 பேர் தேர்வு எழுதினார்கள். 2 ஆயிரத்து 617 பேர் தேர்வு எழுத வரவில்லை. 55 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் பேர் தேர்வு எழுதவராததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.