நாமக்கல்
அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை
|மோகனூர் அருகே அரசு மணல் கிடங்கு, அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தினர்.
மோகனூர்
அமலாக்கத்துறை சோதனை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளி, அதனை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான மணல் கிடங்கில் நேற்றுமுன்தினம் அமலாக்கத் துறையை சேர்ந்த 10 அதிகாரிகள், 7 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் செவிட்டுரங்கன்பட்டிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் மணல் கிடங்கில், அலுவலகத்தில் திடீரென சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. ஆன்லைன் பதிவு மூலம் எவ்வளவு விற்பனை நடைபெற்று உள்ளது என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? எனவும் விசாரணை நடத்தினர்.
ஆற்றில் மணல் அள்ளி அதனை கிடங்குக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவரும், குவாரியில் உள்ள மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரும் பெற்று உள்ளனர். இவர்கள் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.
2-வது நாளாக...
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மணல் சேமிப்பு கிடங்கு அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றில் கிடைக்க பெற்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும் போலி பில் புக் பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் சங்கீதாவிடமும், அலுவலகத்தில் இருந்த பாலமுருகன் உள்ளிட்ட 3 ஊழியர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் நேற்றுமுன்தினம் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை நேற்று 2-வது நாளாக இரவு 9 மணிக்கு முடித்துக்கொண்டு முக்கிய ஆவணங்களை 3 பைகளில் காரில் எடுத்து சென்றனர்.