< Back
தமிழக செய்திகள்
சிறையில் செல்போன் பயன்படுத்தும் பயங்கரவாத கைதிகள்...! நாச வேலைக்கு திட்டமா...?
தமிழக செய்திகள்

சிறையில் செல்போன் பயன்படுத்தும் பயங்கரவாத கைதிகள்...! நாச வேலைக்கு திட்டமா...?

தினத்தந்தி
|
25 July 2023 11:36 AM IST

பயங்கரவாத வழக்குகளில் புழல் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட கைதிகள் நாசவேலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:

புழல் சிறையில் உயர் ரக பாதுகாப்பு பிரிவில் இருக்கக்கூடிய பயங்கரவாத கைதிகள் வெளியே உள்ள கூட்டாளிகளுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசியதை போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2018ல் புழல் சிறையில் பயங்கரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிலால் மாலிக் பக்ருதீன் உள்ளிட்ட கைதிகள் சொகுசு வசதிகளை பயன்படுத்தியதாக கூறி வெளியான புகைப்படம், வீடியோக்கள் பெரும் பரபரப்பை கிளப்பியது.

புகார் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதன் பிறகு பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், தற்போது மீண்டும் ஒரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புழல் சிறையில் இருந்த கைதி சரவணன் வெளியே வந்து வேறொரு வழக்கில் கைதான நிலையில் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில், புழல் சிறையில் இருந்தபடியே சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கூட்டாளிகளுடன் போலீஸ் பக்ருதீன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடியோ, வாட்ஸப் கால் மூலமாக வெளியில் உள்ளவர்களை போலீஸ் பக்ருதீன் தொடர்பு கொண்டுள்ளார். போலீஸ் பக்ருதீன் சிறையில் ஏராளமான செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போலீஸ் பக்ருதீனிடம் கைதி சரவணன் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோர் உத்தரவிடும் பணிகளை சரவணன் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. புழல் சிறையில் இருந்து கொண்டே நாசவேலை செய்ய திட்டமா? என உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்