தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்காமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
|தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்காமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டஒழுங்கை பாதுகாக்க முழுகவனம் செலுத்த வேண்டும். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இது தீவிரவாத செயலா? என்பதை கண்டறிந்து தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்காமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. இருப்பினும் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
ஏற்கெனவே வழிப்பறி, கொலை, கொள்ளை, போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமை என தமிழகம் சீரழிந்து வரும் நிலையில் தற்போது சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தால் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கெனவே பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முழு கவனம் செலுத்த வேண்டும். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இது தீவிரவாத செயலா என்பதை கண்டறிந்து தமிழகத்தில் தீவிரவாத கலாசாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, மக்களுக்கு, பாதுகாப்பான அச்சுறுத்தல் இல்லாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.