ஈரோடு
சென்னிமலை அருகே பயங்கரம்:கணவரை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவி கைது
|சென்னிமலை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் கணவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் கணவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் புதூரை சேர்ந்தவர் பாலு (வயது 63). இவருடைய மனைவி ஈஸ்வரி (58). இவர்கள் இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாமக்கல்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
பாலு அதே பகுதியில் உள்ள ஒரு ரொட்டி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி ஈஸ்வரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலு குடிபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஈஸ்வரியை பாலு தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி அரிவாளை எடுத்து பாலுவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, வாய் ஆகிய பகுதிகளில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாலு உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஈஸ்வரியை கைது செய்தனர்.
குடிபோதையில் தகராறு செய்து வந்த கணவரை மனைவியே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் சென்னிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.