சென்னை
ராயப்பேட்டையில் பயங்கரம்: குடிபோதையில் தகராறு; வாலிபர் அடித்து கொலை - பெண் உள்பட 4 பேர் கைது
|ராயப்பேட்டையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராயப்பேட்டை காசிம் தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது மகன் தாவித்ராஜா (வயது 20). கூலி தொழிலாளி. இவர் கடந்த 14-ந் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் தெற்கு நுழைவு வாயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை தேவி மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி தாவித்ராஜா இறந்து போனார்.
இது தொடர்பாக தேவி கொடுத்த புகார் அடிப்படையில் சந்தேக மரணம் சட்டப்பிரிவின் கீழ் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் அண்ணாசாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் தாவித்ராஜா அடித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினார்கள்.
தாவித்ராஜா சாவதற்கு முந்தைய நாள் இரவு தனது நண்பர்களான சங்கீதா, ஜீவா, ராஜேஷ் மற்றும் பார்த்திபன் ஆகியோருடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் மது அருந்தி உள்ளார்.
போதை மயக்கத்தில் இருந்த தாவித்ராஜா, சங்கீதாவின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜீவா, ராஜேஷ், பார்த்திபன் ஆகியோர் சேர்ந்து தாவித்ராஜாவை தாக்கி உள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் தெற்கு நுழைவு வாயிலில் போட்டுவிட்டு தப்பிச்சென்று உள்ளனர். இந்த சம்பவம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சங்கீதா உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.