சென்னை
ஓட்டேரியில் பயங்கரம்; ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை - 4 பேர் கொண்ட கும்பல் போலீசில் சரண்
|ஓட்டேரியில் 4 பேர் கொண்ட கும்பலால் ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர், கோகுல் 2-வது தெருவை சேர்ந்தவர் அஜிசுல்லா (வயது 30). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அஜிசுல்லா ஓட்டேரியில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை விற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி, ஸ்டாரன்ஸ் சாலையில் தனது உறவினர் வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட திடீரென அஜிசுல்லா மீது மிளகாய் பொடியை தூவி அவரை தாக்கினர். இதில் நிலைகுலைந்த அவரை கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக அஜிசுல்லாவை வெட்டி சாய்த்தனர். இதில் உடலில் பல இடங்களில் பலத்த காயமடைந்த அஜிசுல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான அஜிசுல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, கொலையாளிகளை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். இந்த நிலையில் அஜிசுல்லா கொலை சம்பவம் தொடர்பாக அருண்(35), சத்தியமூர்த்தி (20), சூர்யா (19), சிறுவன் உள்பட 4 பேரும் ஓட்டேரி போலீசில் சரணடைந்தனர்.
கொலை சம்பவத்துக்கு கத்தி கொடுத்து உடந்தையாக இருந்த பரூதீன்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், கஞ்சா விற்று தரும் தகராறில் அருணை, அஜிசுல்லா தாக்கியதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக அருண் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து திட்டமிட்டு அஜிசுல்லாவை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.