ஈரோடு
ஈரோட்டில் பயங்கரம்: ஓட்டல் தொழிலாளி ஓட ஓட வெட்டிக்கொலை தம்பி கைது
|ஓட்டல் தொழிலாளி ஓட ஓட வெட்டிக்கொலை
ஈரோட்டில் ஓட்டல் தொழிலாளியை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
குலை நடுங்க செய்யும் இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓட்டல் தொழிலாளி
திருப்பத்தூரை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (வயது 32). திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து ஈரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய தம்பி அஜித்குமார் (27). திருமணமான இவர் ஈரோடு பெரியண்ணன் வீதியில் குடும்பத்துடன் தங்கி லேப் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அருண்பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன், தம்பிக்கு இடையே அவ்வப்போது பிரச்சினை இருந்து வந்தது.
நேற்று முன்தினம் அருண்பாண்டியன் வழக்கம்போல் மது குடித்துவிட்டு அஜித்குமார் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் அஜித்குமார் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்.
ஓட ஓட வெட்டி கொலை
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அருண்பாண்டியன் ஓட்டல் வேலைக்கு செல்வதற்காக மொசவண்ணா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜித்குமார் அண்ணனை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் குடிபோதையில் இருந்த அருண்பாண்டியன் தம்பியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் கறி வெட்டும் அரிவாளால் அண்ணனை வெட்ட முயன்றார். அதிர்ச்சி அடைந்த அருண்பாண்டியன் தம்பியிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடினார். எனினும் கடும் கோபத்தில் இருந்த அஜித்குமார் அண்ணன் என்றும் பாராமல் அருண்பாண்டியனை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அருண்பாண்டியன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தார்.
கைது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் அருண்பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜீத்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் கொலை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.