சென்னையில் பயங்கரம்: காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
|காதல் விவகாரம் இளம்பெண்ணின் அண்ணனுக்கு பிடிக்காததால் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சென்னை,
சென்னை எண்ணூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (வயது 19). இவர் தந்தையுடன் சேர்ந்து கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு செல்போன் அழைப்பு வரவே வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று காலை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை எதிரே உள்ள காலி மைதானத்தில் பவுல்ராஜ் தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக எண்ணூர் உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பவுல்ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் அண்ணனுக்கு பிடிக்காததால் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தொடர்ந்து பவுல்ராஜும் இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பவுல்ராஜை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காலி மைதானத்திற்கு வரவழைத்து கத்தியால் பயங்கரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணன் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.