சென்னை
பட்டப்பகலில் பயங்கரம்: அரிவாளால் வெட்டி ரவுடி படுகொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
|பூந்தமல்லி அருகே பட்டப்பகலில் ரவுடி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு பகுதியில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த நபரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்ற அந்த வாலிபரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடியது. இதில் அந்த நபர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (22) என்பதும், வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் மீது கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் இவர் தனது நண்பர் ஸ்ரீதர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.