< Back
மாநில செய்திகள்
சென்னையில் மீண்டும் பயங்கரம்: 2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் பயங்கரம்: 2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்

தினத்தந்தி
|
31 May 2024 3:28 AM IST

நாய் கடித்ததில் குழந்தையின் கன்னத்தில் சதை கிழிந்து ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் தற்போது, கால்நடைகள் பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக, சென்னையில் மக்கள் தினமும் கால்நடையால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதில் 2 கால்நடைகளால்தான் சென்னையில் விபத்துகள் அதிமாக ஏற்படுகிறது.

ஒன்று 'மாடு' மற்றொன்று 'தெருநாய்'. கடந்த ஆகஸ்டு மாதம் அரும்பாக்கத்தில், சிறுமியை மாடு முட்டிய சம்பவத்திற்கு பிறகு, சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை மாநகராட்சியால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபக்கம் இருக்க தற்போது தெருவுக்கு தெரு சென்னையில் நாய்கள் பிரச்சினை அதிகமாகி கொண்டே இருக்கிறது.

கடந்த 6-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமி சுரக்ஷாவை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னையில் மீண்டும் இதுபோல ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை அண்ணாநகர், ஜீவன் பீமாநகர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 31). இவர் மெக்கானிக்கான வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரதீபா (26). இவர்களுக்கு யாஸ்மிகா என்ற 2½ வயது குழந்தை உள்ளது. தங்கபாண்டியன் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் முதல் மாடியில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில், கடந்த 27-ந்தேதி தங்கபாண்டியன் வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் பிரதீபா மற்றும் யாஸ்மிகா மட்டும் இருந்தனர். மாலை 4 மணியளவில் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் யாஸ்மிகா அருகில் உள்ள வீட்டின் முன்பகுதியில் உள்ள தோட்டத்தின் அருகில் விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது, அந்த தோட்டத்தில் மறைந்து இருந்த தெருநாய் ஒன்று யாஸ்மிகாவை பார்த்ததும் கடிப்பதற்கு மேலே பாய்ந்தது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது, தெருநாய் குழந்தையின் முகத்தில் கண்மூடி தனமாக கடித்து குதறியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, தாய் பிரதீபா தனது வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து பார்த்தார். அப்போது, தெருநாய் ஒன்று தனது குழந்தையை கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அருகில் கிடந்த கட்டையை எடுத்து நாயை அடித்து துரத்தினார். நாய் கடித்ததில் குழந்தையின் கன்னத்தில் சதை கிழிந்து ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பிரதீபா கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு நாய்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், குழந்தையின் கன்னத்தில் தெருநாய் கடித்து குதறியதால், சதை கிழிந்து தொங்கியது. எனவே, கடந்த 28-ந்தேதி குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. பின்னர், அன்று மாலையே குழந்தை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து யாஸ்மிகாவின் தந்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு மாநகராட்சி ஊழியர்கள் வந்து, குழந்தையை கடித்த நாயை தேடினர். ஆனால் அந்த நாய் கிடைக்காததால் திரும்பி சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்