மதுரை: கள்ளழகர் கோவில் வளாகத்தில் பயங்கர தீ விபத்து
|மதுரை:
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் உள் பிரகாரத்தின் ஒரு பகுதியில் உள்ள ஒரு அறையில் நேற்று மாலையில் திடீர் என புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மேலூர் தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தால் அந்த அறையில் இருந்த பழைய புத்தகங்கள், சாமி படங்கள் எரிந்து சேதமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் கசிவினால் தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த இடத்தை அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனிஷ்சேகர், கோவில் துணை ஆணையர் ராமசாமி, பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம் மற்றும் கோவில் அலுவலர்கள், வருவாய் துறையினர் பார்வையிட்டனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.