வேலூர்
மரப்பட்டறை கடைகளில் பயங்கர தீ விபத்து
|வேலூர் சாய்நாதபுரத்தில் 2 மரப்பட்டறை கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
வேலூர் சாய்நாதபுரத்தில் 2 மரப்பட்டறை கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
மரப்பட்டறை கடைகள்
வேலூர் சாய்நாதபுரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவர்கள் இருவரும் சாய்நாதபுரம் புதுத்தெருவில் அடுத்தடுத்து மரப்பட்டறை கடைகள் நடத்தி வருகின்றனர்.
இந்த கடைகளில் வீடு, கடைகள், அலுவலகங்களுக்கு தேவையான ஜன்னல், கதவுகள், மேசைகள் உள்ளிட்டவை தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. நேற்று இரவு சுரேஷ் மரப்பட்டறையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அவரின் மரப்பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகைகள் வெளியேறின. இதைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) செல்வமூர்த்தி தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடையில் எளிதில் தீப்பற்றி எரியும் மரப்பொருட்கள் இருந்ததால் அவை பயங்கரமாக பற்றி எரிந்து அருகே உள்ள சுபாஷ் மரப்பட்டறை கடைக்கும் தீ பரவியது.
பல லட்சம் பொருட்கள் நாசம்
மரப்பொருட்கள் அனைத்தும் தொடர்ச்சியாக கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து காட்பாடி மற்றும் கண்ணமங்கலத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் 2 கடைகளிலும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இதில் 2 கடைகளில் இருந்த மரக்கட்டைகள், கதவுகள், ஜன்னல்கள், பலகைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்களின் சதிச்செயலா என்பது குறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.