திண்டுக்கல்
லேத் பட்டறையில் பயங்கர தீ
|ஒட்டன்சத்திரம் அருகே, லேத் பட்டறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
லேத் பட்டறையில் தீ
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை சாலையூர் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 51). இவர், அப்பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி சுதாராணி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
லட்சுமணனின் வீடும், லேத் பட்டறையும் அருகருகே உள்ளது. அதாவது முன்பகுதியில் லேத் பட்டறையும், அதற்கு பின்னால் லட்சுமணனின் வீடும் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், லேத் பட்டறையை லட்சுமணன் திறக்கவில்லை. அதனை பூட்டி விட்டு தனது வீட்டில் லட்சுமணன், மனைவி மற்றும் மகனுடன் இருந்தார்.
லேத் பட்டறையின் பக்கவாட்டு பகுதியில் தென்னை ஓலையால் வேயப்பட்ட கூரை இருந்தது. அதில் நேற்று பகல் 11.40 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ மள, மளவென பரவி ஆஸ்பெட்டாஸ் சீட்டால் ஆன மேற்கூரையும் பற்றி எரிந்தது. மேலும் அவரது வீட்டிலும் தீப்பற்றியது.
3 பேர் உயிர் தப்பினர்
இதைக்கண்ட லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்து 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று அலறியடித்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். இவர்கள் கண்எதிரே லேத் பட்டறை, வீடு ஆகியவற்றில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தங்களது வீடுகளில் இருந்து குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. கரும்புகை வெளியேறியபடி தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.
நகை, பணம் நாசம்
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் லேத் பட்டறையில் இருந்த எந்திரங்கள் தீயில் எரிந்தன.
இதேபோல் வீட்டில் இருந்த டி.வி., கட்டில், துணிமணிகள், பீரோவில் இருந்த பணம், நகைகள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்தில் பல லட்சம் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து, இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.