< Back
மாநில செய்திகள்
குரோம்பேட்டையில் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
சென்னை
மாநில செய்திகள்

குரோம்பேட்டையில் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

தினத்தந்தி
|
1 Feb 2023 9:39 AM IST

குரோம்பேட்டையில் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தில் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின.

சென்னை அடுத்த குரோம்பேட்டை மார்க்கெட் ராதா நகர் நாயுடு ஷாப் சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் ரமேஷ். இவருடைய கடையில் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரமேஷ் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றதையடுத்து, நேற்று அதிகாலை பூட்டியிருந்த கடையில் திடீரென தீப்பிடித்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததில் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின. கடையில் இருந்த இன்வெர்ட்டர் மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்