< Back
மாநில செய்திகள்
காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்
மாநில செய்திகள்

காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்

தினத்தந்தி
|
10 July 2023 3:23 PM IST

காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் இன்று காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி ஆகியோர் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்கு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் சமையல் கூடம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் பலனில்லை. அதற்கு மாறாக தீ பேக்கரி முழுவதும் பரவியது.

உடனே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் பேக்கரி கடையில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள உணவு வகைகள், இனிப்பு தயாரிக்கும் எந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமாகின.

இந்த சம்பவம் தொடர்பாக காரைக்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்