சென்னை மணலி அருகே பயங்கர தீ விபத்து.. அதிகாலையில் பீதி அடைந்த மக்கள்
|20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.
சென்னை,
சென்னை அடுத்த மணலி ஆண்டார் குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன சேமிப்பு கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த கிடங்கில் இன்று அதிகாலை 1 மணி அளவில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. மளமளவென தீ பரவிய நிலையில், குடோனில் தங்கியிருந்த ஊழியர்கள், குடோனில் தீ பற்றியதை பார்த்ததுமே, அலறியடித்து வெளியே ஓடிவந்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, எண்ணூர், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, மீஞ்சூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் டையர் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.
ராட்சத தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மீண்டும் தீயை அணைக்க வீரர்கள் முயன்றனர். ஆனால், அதற்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து, மெட்ரோ லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடி வருகிறார்கள். இந்த தீ விபத்தால் அந்த பகுதியை அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் காலையிலேயே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.