ராமநாதபுரம்
ஓய்வு பெறும் நாளில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்
|கழிவறை கட்டும் திட்டத்தில் பணம் கையாடல் வழக்கில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சிவகங்கை
கழிவறை கட்டும் திட்டத்தில் பணம் கையாடல் வழக்கில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பணம் கையாடல்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த மறவமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பால்குளம், மறவமங்கலம், பூதகுடி மற்றும் பலுவாகுடை உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசின் இலவச கழிவறை கட்டும் திட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 403 கழிவறைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதில் 373 கழிவறை மட்டுமே கட்டப்பட்டுள்ளன. 30 கழிவறைகளை கட்டாமலேயே பணத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து பால்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி கண்ணன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மறவமங்கலம் ஊராட்சி செயலர் முத்துக்கண்ணு மற்றும் காளையார்கோவில் யூனியனில் அலுவலர்களாக பணியாற்றிய செல்வராஜ், ரமேஷ், அமலோற்பவம், சந்திரா, நசீரா பேகம், அன்பு துரை, இளங்கோ தாயுமானவர் மற்றும் இளங்கோ ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் நேற்றுடன் பணி ஓய்வு பெற இருந்தார். இந்தநிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.