< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தினத்தந்தி
|
9 Aug 2023 9:57 AM IST

திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியான ஆடி பரணி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

திருத்தணி,

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுவது திருத்தணி முருகன் கோவில். இங்கு ஆடிக்கிருத்திகை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டிற்கான ஆடிக்கிருத்திகை திருவிழா நேற்று முன்தினம் ஆடி அஸ்வினியுடன் கோலகலமாக தொடங்கியது.

இந்நிலையில் நேற்று ஆடி பரணி என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உள்பட, அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். பின் மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை மற்றும் மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில் பக்தர்கள் புனித நீராடி, மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர்.

மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பொது வழியில், பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் காவடிகளுடன் பம்பை, உடுக்கை மற்றும் சிலம்பாட்டத்துடன் வந்து வழிபட்டனர். விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

காவடி மண்டபத்தில் உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அசம்பாவிதங்களை தவிர்க்க காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்