< Back
மாநில செய்திகள்
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை...!
மாநில செய்திகள்

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை...!

தினத்தந்தி
|
7 Aug 2022 9:11 AM IST

வெள்ளப்பெருக்கு குறையாததால் குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. போலீசார் அருவிகளுக்கு செல்லும் பாதையில் தடுப்புகள் வைத்து யாரும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு நேற்று ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உற்சாகமாக அருவிகளில் குளித்து சென்றனர்.

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கு குறையாததால் குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்