சென்னை
ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
|பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் புதிய கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பதற்கான பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னைப் பெருநகர் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார், செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
சென்னையில் குடிநீர் வாரியத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை பயன்பாட்டுக்கான நீரை உற்பத்தி செய்வதற்கான சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.817.32 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூர், கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட 17 பகுதிகளில் ரூ.754.51 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 8 பகுதிகளில் ரூ.525.77 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்துவருகின்றன.
சென்னை பெருநகர மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்கும்பொருட்டு ரூ.1,070 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மீஞ்சூர், நெம்மேலியில் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கூடுதலாக, பேரூரில் ரூ.6,078.40 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் ரூ.877.37 கோடியில் கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் பெருங்குடியில் அமைந்துள்ள 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தும் பணி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் சுரங்கபாதையின் குறுக்கே ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைமேம்பாலம் மற்றும் அண்ணாநகரில் உள்ள கும்மாளம்மன் கோவில் தெருவில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம்.பி., எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.