தற்காலிக ஆசிரியர் நியமனம் நிறுத்தம் - திடீர் உத்தரவு..!
|தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்தை உடனடியாக நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அரசுப்பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிக அடிப்படையில் இந்த பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி நிர்வாகக்குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதையடுத்து உடனடியாக இந்த பணிநியமனப் பணிகளை நிறுத்த வேண்டுமென்று திண்டுக்கல் மாவட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தற்போது கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறையின் முறையான அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இந்த பணிநியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.