திருச்சி
'சிக்னல்'களில் தற்காலிக மேற்கூரை
|‘சிக்னல்’களில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் தொடங்கினாலும், பின்னர் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். திருச்சியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மதிய நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா சிக்னலின் ஒரு பகுதியில் திருச்சி மாநகர போலீசார் சார்பில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த முயற்சிக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கமின்றி இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிக்னல்களில் தற்காலிக மேற்கூரை அமைக்க திருச்சி மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.