< Back
மாநில செய்திகள்
3-வது நாளாக தற்காலிக நர்சுகள் காத்திருப்பு போராட்டம்
சேலம்
மாநில செய்திகள்

3-வது நாளாக தற்காலிக நர்சுகள் காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
4 Jan 2023 1:09 AM IST

பணி நீட்டிப்பு வழங்க கோரி சேலத்தில் தற்காலிக நர்சுகள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். அவர்களுடைய காத்திருப்பு போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

சேலம்:-

பணி நீட்டிப்பு வழங்க கோரி சேலத்தில் தற்காலிக நர்சுகள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். அவர்களுடைய காத்திருப்பு போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

நர்சுகள் போராட்டம்

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுவதற்காக தற்காலிகமாக 2 ஆயிரத்து 400 நர்சுகள் நியமிக்கப்பட்டனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 66 நர்சுகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.14 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்காலிக நர்சுகள் கடந்த மாதம் 31-ந் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் பணி நீட்டிப்பு வழங்க கோரி கடந்த 1-ந் தேதி முதல் சேலத்தில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் பணி நீட்டிப்பு வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்து அங்கிருந்து கலையாமல் இருந்தனர்.

அனுமதி மறுப்பு

இதனிடையே நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் போராட்டம் நடத்துவதற்காக நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நர்சுகள் சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

பின்னர் அவர்கள் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அங்கு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். மேலும் அந்த சாலையை வாகனங்கள் எதுவும் செல்லாத வகையில் போலீசார் தடுப்பு கம்பிகள் வைத்து அடைப்பு ஏற்படுத்தினர்.

கண்களில் கருப்பு துணி

இதைத்தொடர்ந்து தற்காலிக நர்சுகள் சேலம் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களுடைய போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அப்போது நர்சுகள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நீட்டிப்பு வழங்கும் வரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று நர்சுகள் தெரிவித்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

133 பேர் கைது

இந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து தற்காலிக நர்சுகள் 133 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்