< Back
மாநில செய்திகள்
கீழமை கோர்ட்டுகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - வைகோ வேண்டுகோள்
மாநில செய்திகள்

கீழமை கோர்ட்டுகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - வைகோ வேண்டுகோள்

தினத்தந்தி
|
10 Oct 2023 4:14 PM IST

கீழமை கோர்ட்டுகளில் பணியாற்றும் 907 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சருக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கீழமை கோர்ட்டுகளில் பல ஆண்டுகளாக 635 தட்டச்சர்கள், 186 இளநிலை ஊழியர்கள், 57 சுருக்கு எழுத்தர்கள், 29 கணினி இயக்குனர்கள் என மொத்தம் 907 பேர் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள் விளம்பரத்தின் மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, கல்வி மற்றும் தகுதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் மூலமாக பணியாணை வழங்கப்பட்டது. இவர்களில் பலர் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆவார்கள்.

நிரந்தர பணியாளர்கள் பெறும் ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த விதமான சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில், பல ஆண்டுகள் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை, நிர்வாக சீர்திருத்தத் துறை மூலம் சிறப்பு நேர்காணல் நடத்தி, கால முறை ஊதியத்தில் நிரந்தரப் பணியாளர்களாக நியமித்தார்கள்.

எனவே ஏற்கனவே உள்ள முன் மாதிரிகளைப் பின்பற்றி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழமை கோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 907 பணியாளர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து, அவர்கள் மீது இரக்கம் காட்டி பணி நிரந்தரம் செய்து, அவர்களது குடும்பங்களில் விளக்கேற்றி வைத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்